-சுஐப் எம் காசிம்
சிறுபான்மை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டப் புறப்பட்ட எந்தக்கட்சிகளும் வடக்கு, கிழக்கு அரசியல் தளத்தை பரந்தளவில் பலப்படுத்தவில்லை. முப்பது வருடப் போரின் வடுக்கள் இந்த ஒற்றுமைக்கும், இணக்கத்துக்கும் பங்கமாக அல்லது சந்தேகமாக இருந்திருக்கும். ஆனால் இனியும் இவ்விரு சமூகங்களையும் சந்தேகம், பகைமை, வேற்றுமைகள் தொற்றிக்கொள்ள இடமளிக்கக்கூடாது.
பெரும்பான்மை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள தளம்பல் நிலைகள் சிறுபான்மை சமூகங்களின் ஒன்றித்தலை அவசரமாக உணர்த்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இரண்டு கட்சிகளாகக் கூறுபட்ட சிங்களப் பெரும்பான்மை வாக்குகள் இம்முறை மூன்று துருவங்களாகச் சிதறவுள்ளன.
இவ்வளவு காலமும் தங்களது அரசியல், இராணுவ இருப்புக்காக தமிழ் மொழிச் சமூகங்களை மோத விட்டும், பகைக்க வைத்தும் பிரித்து வைத்த பேரினவாதிகள் இன்று தங்களுக்குள் பிரிந்து வாக்கு வங்கிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்ட கால நீதிப் போராட்டத்துக்கு தீர்வுகிடைப்பதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாக இதைக் கருதலாம். இங்குதான் தமிழ் மொழிச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் நன்றாக சிந்திக்க வேண்டியுள்ளது.
பிராந்திய, பிரதேச, இனவாத நலன்களில் குறிவைக்காமல் தமிழ் மொழிப் பூர்வீகத்தில் அக்கறை கொள்ளும் தருணமே இது. தமிழ், முஸ்லிம் ஒற்றுமை பற்றி எத்தனை தலைவர்கள் இதற்கு முன்னர், எத்தனை தடவைகள் பேசினர். அஷ்ரஃபின் காலந்தொட்டு பேசப்படும் வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழ் முஸ்லிம் ஒற்றுமைகள் தோற்றுப்போனதேன்? இக்கட்சிகளின் ஒவ்வொரு கோஷங்களுக்குப் பின்னாலும் மறைந்திருந்த சுயநல அஜண்டாக்களே, இதைத் தோற்கடித்தன. முப்பது வருடப் போரில் அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தமிழ் சமூகத்தை, எவரும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இம் மக்களுக்கு வேறு தலைமைகள் அல்லது அரசியல்வாதிகள் உதவ முன் வந்தால் தமிழ் தலைமைகள் அதை விட்டபாடுமில்லை.
தமிழர்களுக்காக முஸ்லிம் தலைமைகள் எதையாவது செய்தால் சோரம்போகும் அரசியலுக்குள் தமிழர்களைத் திணித்து முஸ்லிம் தலைமைகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டன. அல்லது பேரினவாத அரசியலுக்குள் தமிழர்களை அமிழ்த்தி போராட்ட குணாம்சங்கள், விடுதலை வேட்கைகளை மலினப்படுத்துவதாக வரைவிலக்கணம் வழங்கப்பட்டன.
தமிழர்கள் மீதான முஸ்லிம் தலைமைகளின் ஜனநாயக, மனிதாபிமான அணுகு முறைகள் கூட சில தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு அச்சம், சந்தேகங்களை ஏற்படுத்தியதை நாம் மறக்க முடியாது. இதற்காகவே தமிழர்களை வலிந்து பிரித்தெடுத்து சிங்கள அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தும் கோமாளிகளாகவும் முஸ்லிம் தலைமைகள் சித்தரிக்கப்பட்டன.
இவையாவும் ஜனநாயக அரசியலுக்குள் தமிழர்களை நுழையவிடாமல் மறித்த தடுப்பு வேலிகளாகவே தற்போது உணரப்பட்டுள்ளது.
இதே போன்று முஸ்லிம் தலைமைகளின் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளன. ஈழப் போராட்டத்துக்கு எதிரானவர்கள், காட்டிக்கொடுத்தவர்கள் எவரையும் தமிழ் போராளிகள் தண்டிக்காமல் விட்டதில்லை. இவ்வாறு முஸ்லிம்களும் தண்டிக்கப்பட்டமை, தூக்கிலிடப்பட்டதெல்லாம் ஈழப்போராட்ட வரலாற்றுப்பதிவுகள். ஆனால் இதைச் சில முஸ்லிம் தலைமைகள் அரசியலுக்காக இனவாதமாகத் தூக்கிப்பிடித்ததால் வந்த விளைவுகளே தமிழ் மொழிச் சமூகத்துக்கு மத்தியில் இழையோடியுள்ள சந்தேகங்களாகும். இந்நிலைமைகள் இனியும் ஏற்படக்கூடாது.
எனினும் சாதாரண அப்பாவி முஸ்லிம்களை பாரிய இனச்சுத்திகரிப்புக்குள் திணித்தமை, வடக்கிலிருந்து முஸ்லிம்களை இரவோடிரவாக விரட்டியமை மற்றும் கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் பாசிச கொலைவெறியாட்டம் ஆகியவை தமிழ்த் தேசியத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்தின.
உண்மையில் இன்று வடமாகாண தமிழ் மக்கள் அபிவிருத்தி, உரிமைகள், விடுதலை உணர்வுகளை விடவும் ஒற்றுமை, யதார்த்தம், சகோதரத்துவத்தை வேண்டி நிற்கின்றனர். இதைவிடவும் தமிழர்களுக்கே உரித்தான நன்றி விசுவாசத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்த காலத்தில் முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களை விடுவித்து நலன்புரி முகாம்களில் குடியமர்த்திய முஸ்லிம் தலைமைக்கு வடக்குத் தமிழர்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். இதன் வெளிப்பாடுகளை மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு பிரதேச சபைகளில் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர்கள் அபிவிருத்திகளுக்காக அணித்திரள்வதென்றால் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியில் தமிழ் மக்கள் இணைந்திருக்கலாம்.
உரிமைகளை வென்றெடுப்பதென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்ப்பு அரசியல் செய்யலாம். இவையிரண்டையும் வடக்கு தமிழர்களில் பலர் நிராகரித்துள்ளனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வடக்கில் உச்சக்கட்ட இனவாதமாகக் சித்தரிக்கப்படும் நிலையிலும் தமிழர்களில் சிலர் அவருடன் இணைந்ததேன்? இதில்தான் தமிழ் மொழித் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.
மாந்தைப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் காட்டியுள்ள இணக்க அரசியலை ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் நம்மவர் அகப்படலாம். இவ்வாறு அகப்படுவது எமது தேவைகள், அபிலாஷைகளை இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின்னடிக்கும் வடக்கு, கிழக்கு அரசியலில் உண்மையான பற்றிருப்போர் மாந்தை பிரதேச தமிழ் மக்களின் அபிலாஷைகளின் பின்புலத்திலிருந்தே தமிழ் தேசியத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment