சுஐப்.எம்.காசிம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் தலைமைகள் மீண்டும் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டிய தருணம் வந்துள்ளது. புலிகளின் போராட்டம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை,அரசியல் சித்தாந்த கோட்பாடுகளில் இத் தலைமைகளால் ஒன்றிணைக்க முடியாதுள்ளது. போராட்ட காலங்களில் பிரித்து வேறாக்கப்பட்ட தமிழ் மொழிச் சமூகங்களின் அரசியல் சித்தாந்தங்கள், விடுதலைப் புலிகளின் மறைவுக்குப் பின்னரும் பிளவுபட்டதாகவேயுள்ளது.
தமிழ்த் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் துரதிஷ்டவசமாக படுகொலைப் போராட்டமாகப் பரிணமித்ததால், இவ்விரு சமூகங்களின் வாழ்விடங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆள்புல எல்லை, அரசியல் ஸ்திரம் என்பன பலராலும் சவாலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கைப் பிரி எனச்சிலரும், இணைக்க வேண்டுமென இன்னும் சிலரும் மேலும் இவ்விடயத்தில் சம்மந்தப்படாத தென்பகுதி அரசியல் தலைமைகள் வேறுசில கருத்துக்களையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலைமை அண்ணன் தம்பியின் காணிப்பிரச்சினை சந்திக்கு வந்து, காணியை சண்டியன் எடுத்துக்கொண்ட கதையாகி விடக்கூடாதென்பதே புத்தி ஜீவிகளின் பிரார்த்தனை. எனவே, புலிகளின் தோல்விக்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள புதிய அரசியல் போக்குகளை, தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைமைகள் அவதானித்துச் செயற்படுவது காலத்தின் நிர்ப்பந்தமாகக் கருதப்பட வேண்டும். உள்ள காணியை புத்திசாதுரியமாகப் பேசி அண்ணன், தம்பி பங்கிட்டுக் கொள்வதே நமது வாழிடங்களைக் காப்பாற்றுவதற்கான வழி. புலிகளின் ஆயுதப்பலம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக்கில் தமிழர்களின் பூர்வீகத் தொழிற்துறைகளை பெரும்பான்மையினர் ஆக்கிரமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மன்னார், நந்திக்கடல், ஓமந்தை பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளமை, முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள காணிகள் புனித பூமியாக மாற்றப்படுகின்றன.
இவை எல்லாம் தமிழ் மொழிச் சமூகங்களின் இருப்பிடங்களுக்கு விடப்படும் பொதுவான அச்சுறுத்தல்களாகும். சிறுபான்மையினர் எதிர்கொண்ட இந்தப் பொதுவான அச்சுறுத்தல் புலிகளின் காலத்தில் முற்றாக இல்லாதிருந்தது. இந்த யதார்த்தம் புலிகளை விரும்பாத பலரையும் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்த வைத்தது. எனவே போராட்டமில்லாத இத் தருணத்தில் சிறுபான்மை சமூகத்துக்குப் பொதுவான பாதுகாப்பு எது? என்பதை தமிழ் மொழியினரின் தலைமைகள் அடையாளம் காணவேண்டும். முன்னர் போன்று தமிழரையும், முஸ்லிம்களையும் ஒரே அரசியல் சித்தாந்தத்தில் சிந்திக்க வைத்து ஒற்றுமைப்படுத்துவதே இதற்கான வழியாகும். இப்பணியை வடக்கிலுள்ள முஸ்லிம் தலைமை ஓரளவு செய்துள்ளது.
மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு, உள்ளுராட்சி சபைகளில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து அவரது கட்சி சார்ந்த தமிழ்ப் பெருமகன் இருவரை தவிசாளராக்கி அதிகாரத்தையும் அந்தக் கட்சிக்கு ஒப்டைத்திருப்பது தமிழ் முஸ்லிம் உறவுக்கு வழிகோலியுள்ளது.
மேலும் வடக்கில் எந்தவொரு கட்சியும் இனவாதம் பேசி, குறிப்பாக தமிழ், முஸ்லிம் வேற்றுமைகளைப் கூர்மைப்படுத்தி,மூலதனமாக்கி வாக்குக் கேட்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்தனை காலமும் மக்களின் மன நிலைகளைப் புரிந்துகொள்ளாமல் கட்சித் தலைமைகள் நடத்திய எந்தப் பேச்சு வார்த்தைகளும் வெற்றி கண்டதில்லை. இக்கட்சிகளின் உடன்பாட்டு அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு கறையான் அரித்த கதைகளாகவேயுள்ளன.
கட்சி மட்டங்களில் எட்டப்படும் பேச்சு வார்த்தைகள், இணக்கப்பாடுகள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அடிமட்ட மக்களை நெறிப்படுத்தவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். கல்முனை மாநகர சபையில் இதுவரைக்கும் நிதிக்குழு நியமிக்கப்படவில்லை. கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இணங்கியும் பிராந்திய, பிரதேச தலைவர்கள் இணங்காதுள்ளதேன்? ஆனால் வடக்கிலுள்ள தமிழர்கள், எவரின் வழிகாட்டலின்றியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்று ஆட்சி அமைத்துள்ளதைச் சிந்திக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எவ்வாறு இருக்குமென எவராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை “கழுவுற மீனில் நழுவிற மீன்” நிலைபாட்டிலே முஸ்லிம் காங்கிரஸுள்ளது. இதனால் கைதேர்ந்த சோதிடனுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்வு கூற முடியாது. தெற்கில் ஒரு கதையும், கிழக்கில் இன்னொரு கதையும், வடக்கில் வீறாப்பும் பேசிவரும் முஸ்லிம்களின் தனித்துவத் தலைமை, இவ்விடயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். இல்லாவிடின் இன்னும் சில காலங்களில் சமூகத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படலாம். மேலும் தெற்கு அரசியல் களம் மூன்றாக சிதைவடையும் அறிகுறிகள் அரசியல் வானில் தென்படத் தொடங்கியுள்ளன.
இவ்விடயத்திலும் சில பேரினவாதிகள் தமது வழமையான கைங்கர்யத்தைப் பாவித்து தமிழரை வேறு அணியிலும், முஸ்லிம்களை வேறு அணியிலும் கூட்டிணைக்கலாம். இதில் இவ்விரு சமூகங்களினதும் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தும் தந்திரங்களுக்கு எமது தலைமைகள் இடம்கொடுக்கக்கூடாது. அதே போல் சிறுபான்மையினரின் வாக்குகளில்லாது ஜனாதிபதியைத் தெரிவுசெய்யலாம் என்ற நிலையையும் தமிழ் மொழிச் சமூகங்கள் உருவாக்கக்கூடாது.
No comments:
Post a Comment